பெரியவா மகிமை

 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்


நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் 


  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா காருண்ய தெய்வமல்லவா? இதனால்தானோ என்னவோ அடைக்கலம் தேடி ஸ்ரீமகானிடம் வருபவர்கள் ஏராளம். தன் துன்பங்களை உணரக் கூடிய பக்தர்களையின்றி அதில் தான் யார் என்பதை அறிந்து கொள்ளும் புத்திசுவாதீனமற்றவர்களும் அடங்கும். புத்தி பேதலித்து பித்தர்களாக இப்படி அவ்வப்போது ஸ்ரீமடத்திற்கு வருவதும் இரண்டு மூன்று நாட்கள் தங்குவதும் நடப்பதுண்டு. ஆனால் இந்தப் பித்தனோ வந்து பத்து பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன. யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. என்றாலும் தன் தலையில் மண்ணைவாரி இறைத்துக் கொள்வதும் எதையாவது சொல்லிக் கொடுத்தால் அதை அப்படியே சொல்வதுமாக அந்த பித்தன் அங்கிருந்தவர்களுக்கு கொஞ்சம் இடைஞ்சலாக சேஷ்டைகள் செய்துக் கொண்டிருந்தான்.இந்த பித்தனை விரட்டி விடலாமென்று ஸ்ரீபெரியவாளிடம் முறையிட்டனர். சாப்பிட்டாலும் அளவுக்கு மீறி அதிகமாக சாப்பிடும் இவன் அங்கே பிரச்சனையாகத்தான் தெரிந்தான்.ஆனால் ஸ்ரீபெரியவாளோ, இருந்துட்டு போகட்டுமே அவன் யாரையும் தொந்திரவு பண்றதில்லயே, என்று தன் கருணையை வெளிப்படுத்தி அவனை வெளியேற்ற வேண்டாமென்றுவிட்டார்.நாட்கள் நகர்ந்தன. ஒரு குடும்பத்தார் மிக வருத்தத்தோடு ஸ்ரீபெரியவா தரிசனத்திற்கு வந்தனர்.அவர்கள் வீட்டில் பூஜை செய்ய வைத்திருந்த விலை மதிப்பற்ற ஸ்ரீசக்ரம், மகாமேரு போன்றவைகள் காணவில்லை. யாரோ திருடிச் சென்றுவிட்டனர். மிகவும் சிரத்தையாக பூஜை செய்து வந்ததால் திருடு போனபின் அவர்களால் சாப்பிடக்கூட முடியவில்லை. தினமும் பூஜை செய்யாமல் அதைநினைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருந்தனர். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் வந்து தங்கள் மனச்சுமையை இறக்கலாம் என்று எண்ணி தரிசித்து நின்றனர்.இவர்களின் குறைகளை ஸ்ரீமகான் கேட்டுக் கொண்டார். இழந்த பொருள்கள் கிடைக்கும், கிடைக்காது என்பது போலெல்லாம் ஆசிர்வதிக்கவில்லை.“அவனைக் கூப்பிடு” என்று அங்கே தங்கியிருந்த பித்தரைக் கூப்பிட்டு வரச் சொன்னார்.“இவரை உங்க கூடக் கூட்டிட்டு போங்க…. திண்ணையிலேயே இருக்கட்டும். வேளாவேளைக்கு ஆகாரம் கேட்டா கொடுங்க” என்று உத்தரவிட்டார். பிரச்னையோடு தீர்வு காணவந்தவர்களுக்கு மேலும் ஒரு தொந்தரவாக ஒரு பித்தரை அழைத்துச் சென்று பராமரிக்கும் சிரமத்தையும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கொடுப்பது போல  அங்கிருந்தோருக்கு தோன்றியது.ஆனால் ஸ்ரீ பெரியவாளின் அருள்கட்டளைக்கு ஆயிரம் அர்த்தங்களிருக்கும் என்று அந்த குடும்பத்தினர் நம்பினர். இவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இந்த பித்தர் இவர்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து ஏதோ ஒரு சேஷ்டையோடு  ஒரு பகவன்நாமாவை சொல்லியபடி உட்கார்ந்து விட்டான். பசிக்கு ஆகாரம் கிடைக்க ஏதோ தன்கிட்ட தலையாய பணியைப்போல இவர் வீட்டின் முன் அமர்ந்து எதையோ ஜபித்துக் கொண்டிருப்பதுபோல தன் பித்தத்தால் செய்துக் கொண்டிருக்க, அக்கம்பக்கத்து ஆசாமிகளுக்கும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் ஒரு அச்சம் எழலாயிற்று.எங்கோ காஞ்சிபுரம் சென்ற இந்த குடும்பத்தினர் ஒரு மந்திரவாதியை அங்கிருந்து அழைத்துக் கொண்டுவந்து இப்படித் திண்ணையில் உட்கார வைத்திருக்கின்றனர். அந்த மந்திரவாதியும் இடைவிடாமல் ஏதோ ஒரு மந்திரத்தை சொல்லி இவர்கள் வீட்டில் திருடியவர்களைக் கண்டுபிடிக்கப் போகிறார் என்றெல்லாம் கற்பனை பரவலாயிற்று.இந்த ‘மந்திரவாதி’ ஏற்படுத்திய பீதியோ என்னவோ தெரியவில்லை, ஓரிரு நாட்களிலேயே திருடுபோன மிக விலை உயர்ந்த பூஜை சாமாங்கள் அத்தனையும் இவர்கள் வீட்டுத் தோட்டத்தில் யாரோ திரும்ப கொண்டுவந்து போட்டிருந்த அதிசயம் நடந்தது. இவைகளை தவிர இதற்கு முன்பும் எதுஎது திருடப்பட்டனவோ அவை அத்தனையும் தோட்டத்தில் பூஜை சாமான்களோடு கூட விழுந்து கிடந்தன.ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் நம்பிக்கை  வைத்த குடும்பத்தினரை அந்த தெய்வம் கைவிடவில்லை. அதற்கும் மேலாக ஒரு புத்திசுவாதீனமில்லாதவரையும் ஆட்கொண்டு அந்த பித்தராலும் நன்மையுண்டு என காட்டுவதற்கென்றே இப்படி ஒரு திருநாடகம் ஆடிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை அவர்கள் மனம் நன்றியுடன் நினைத்து ஆனந்தித்தது.


அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்


ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

Comments

Popular

மஹா பெரியவா அருளுரை

பெரியவா மகிமை

பெரியவா மகிமை