பெரியவா மகிமை
கருணை தெய்வமாம் ஈஸ்வரரே ஒரு சாதாரண சந்யாச திருக்கோலம் கொண்டு, உயரியமேன்மை நிலையாம் சுகபிரம்மரிஷி அவர்களின் லக்ஷணங்களோடும் திகழ்ந்து நம்மிடையே அந்த அபூர்வ உயர்நிலையை மறைத்த எளிமையோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் அருள்பொழிந்துள்ளார்.
ஸ்ரீ சுந்தரராமன் அவர்களுக்கு ஸ்ரீ மஹாபெரியவாளிடம் ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் ஏராளம் ஸ்ரீ பெரியவா வலியவந்து அருளி அவருக்கு படித்து பட்டம் பெற எல்லா ஏற்பாடுகளையும் தந்தையின் மேலான அக்கறையுடனும் கருணையோடும் அனுக்ரஹத்துள்ளார்.
1960-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அவர் பி.எஸ்.ஸி. ஹானர்ஸ் பரிட்சைகளை எழுதிவிட்டு திருச்சியில் ஸ்ரீ பெரியவாளுக்கு இரண்டு மாதங்களாக கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருச்சிராபள்ளி நேஷனல் உயர்நிலை பள்ளியில் ஸ்ரீ பெரியவா அருளிக்கொண்டிருந்தார் ஒரு நாள் காலை பள்ளியின் எதிரே இருந்த பார்பர்ஷாப்பிற்கு சுந்தரராமன் சென்றார். முடிதிருத்திக் கொள்ள உட்கார்ந்தார். எப்போதுமே இப்படிப்பட்ட சமயங்களில் எல்லா நாவிதர்களும் தன் வேலையோடு ஏதாவது அரட்டை அடித்துக் கொண்டே தொழில் செய்வார்கள். அவர்களுக்கு அரசியலைப்பற்றியோ, அரசியல்வாதிகளைப்பற்றியோ, சினிமா நடிகர்களைப் பற்றியோ பேசுவது சுவாரஸ்யமாக இருக்கும். கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ என்ற எண்ணமில்லாமல் அவர்கள் இப்படிப்பட்ட சங்கதிகளை பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம்.
இவருக்கு முடிதிருத்தும்போதும் அந்த நாவிதர் அதே வகையில் பேச்சை ஆரம்பித்தார். இவர் கடைக்கு புதிதாக வருபவராய் இருந்ததால் எங்கேயிருந்து வருகிறார் என்ன வேலை செய்கிறார் என்று கேட்டு தன் அரட்டையை தொடங்கினார்.
"நான் சிதம்பரத்திலே வேலை பாக்கறேன், இங்கே மஹாபெரியவான்னு ஒரு சந்யாசி நேஷனல் ஸ்கூல்லே தங்கியிருக்காரு அவரை தரிசனம் செஞ்சி மடத்துக்கு என்னால முடிஞ்ச வேலையை செய்ய விடுமுறையிலே வந்திருக்கேன்” என்றார் சுந்தரராமன்."ஓகோ அப்படியா! நாங்கலெல்லாம் பெரியாரோட கொள்கையை கடைபிடிக்கறவங்க" என்று பார்பர் தன் கையில் கத்தியுடன் சொன்னபோது சுந்தரராமனுக்கு வெடவெடத்துபோனது, அவர் போதாகுறைக்கு குடுமி வைத்திருந்தார். அதன் அருகே நாவிதரின் கத்தி பயமுறுத்திக் கொண்டிருந்தது. சுந்தரராமன் சற்றே நெளியலானார்.
ஆனால் அந்த நாத்திக நாவிதர் மேலும் பேசியபோது இவருக்கு ஆச்சர்யம் முகுந்தது. "ஐயா நான் ஊர்லே இருக்கிற சாமியாருங்க எல்லாரையும் ஏமாத்தற ஆசாமிங்கன்னும், போலிசாமியாருங்கன்னும் நினைச்சதுண்டு ஆனா நீங்க பார்க்க வந்திருக்கிற இந்த சாமியாரைப் பார்த்தா அப்படி தெரியலே. நான் பெரியார் வழி நடக்கறவன்தான். மனதுலே பட்டதை மறைக்காம சொல்லிடுவேன் ஆனா நீங்க சொன்ன சாமியார் மேலே ஒரு மரியாதை வருது" என்றார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த சுந்தரராமனுக்கு நிம்மதி பெருமூச்சி வந்தது.
“நீ ஏம்பா அப்படி நினைக்கிறே” கொஞ்சம் தைர்யம் வந்ததும் அவனை கேட்டார் சுந்தரராமன்
"தினமும் இந்த சாமியார் ஸ்கூலைவிட்டு வெளியலே எங்கேங்கேயோ போயிட்டு வந்துட்டுதான் இருக்காரு. முதல்ல சில நாள் அவரை நான் ஏன் பாக்கனும்னு இருந்துட்டேன். எனக்கு சாமி, சாமியார்னு நம்பிக்கை இல்லாததாலே அவரை பார்க்காம இந்த பக்கம் திரும்பிப்பேன், ஆனா ஒருநாள் எப்படியோ திரும்பும்போது சாமியாரை நேருக்கு நேரா பார்க்கற மாதிரி ஆய்போச்சு. அவரோட முகம் குழந்தை மாதிரி இருந்துச்சு. அவரோட கண் ரெண்டிலேயும் ஒரு வெளிச்சம் என்மேலே பட்டமாதிரி எனக்கு உடம்பு சிலிர்த்துபோச்சு.
என்னமோ என்னையும் அறியாம என் கைரெண்டும் அந்த சாமியாரைப் பார்த்து கூப்பி வணக்கம் செய்யனும்போல தானா எழும்பி கும்புடு போட்டுச்சு நான் வெட்கப்பட்டு இப்படி பண்றோமேன்னு ரொம்ப கஷ்டப்பட்டு கைய்களை அடக்கி வைச்சுக்கும்படியாயிடுச்சி.
அப்புறம் இதைப்பத்தி என் நாத்திக நண்பர்கள்கிட்டே சொன்னபோது அவர்களும் நான் சொன்னது மெய்தான் எங்களுக்கும் அந்த சாமியாரைப் பார்த்து கும்பிட்டு வணங்கனும்னுதான் தோணுன்னு சொன்னாங்க அதனாலே அவர்கிட்டே வர்ற உங்களைப்போல ஆசாமிங்களுக்கு நாங்க ஒரு தீங்கும் பண்ணமாட்டோம். பயப்படாதீங்க”
இப்படி அந்த நாவிதர் சொல்ல, சொல்ல சுந்தராராமன் மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது.
முடிதிருத்திக் கொண்டு சுந்தரராமன் திரும்பினார். மதியம் இரண்டு மணியிருக்கும் பள்ளியின் பின்பக்கமாக சுந்தரராமன் யதேச்சையாக போக நேர்ந்தது. அப்போது அங்கே ஸ்ரீ பெரியவாளும் வருவதாக தெரிந்து மகானின் முன்னே வரமால் ஒடி ஒதுங்க இவர் முயன்றார். பொதுவாக முகசவரம், முடிதிருத்தம் செய்து கொண்ட நாட்களில் ஸ்ரீ பெரியவா போன்ற மகான்களை நேரே சென்று தரிசனம் செய்வது அத்தனை உதிசமாகாது இதனால்தான் சுந்தரராமன் ஒடி மறைய முயன்றார்.
ஆனால் ஸ்ரீ பெரியவாளோ "நான்தான் பிட்சை பண்ணியாச்சே" என்று இவரை வரச்சொல்லி தரிசனமும் அருளினார். “நீ இன்னிக்கு ஷவரம் பண்ணின்டயோ?" ஸ்ரீ பெரியவா கேட்டார்.
சுந்தரராமன் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு யாரும் இல்லாத தைர்யத்தில் "ஆமாம் பெரியவா... இன்னிக்கு பண்ணின்டேன்... உங்க முன்னாலே வரக்கூடாதுன்னுதான் ஓடினேன்... மத்தவா இதை பார்த்தாகூட கோவிச்சுப்பா” என்று தயங்கியபடி கூறினார்.
உடனே ஸ்ரீ பெரியவா "சரி அதை விடு... ஷவரம் செய்யும்போது பார்பர் எதையாவது கதை சொல்லியிருப்பானே” என்று வேடிக்கையாக கேட்டார்.
"இல்லே பெரியவா... இந்த பார்பர் கதை சொல்றதுக்கு பதிலா ஆன்மீகமா பேசினார். பெரியவாளை ரொம்பவும் சிலாகிச்சு பேசினார்" என்று இவர் பார்பர் சொன்ன விஷயங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீ பெரியவாளிடம் சொன்னார்.
இதைக் கேட்ட ஸ்ரீ பெரியவா சிறிதுநேரம் மௌனமாக இருந்தார், பின்பு “சில சமயம் நான் நினைச்சுப்பேன்... லோகத்துக்குக்கான்னு நான் பண்றதெல்லாம் என்னமாதிரி உபயோகமாகியிருக்குன்னு எனக்கு சந்தேகம் வரும்... நீ இப்போ சொன்னதை கேட்கறச்ச அதெல்லாம் வீணாகலேன்னு தோன்றது”
மாபெரும் ஞானி மிகவும் எளிமையாக இப்படி கூறியபடியே தன் அபார மகிமையை மறைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டாராம். இப்பேர்பட்ட தன்னடக்கம் கொண்ட மகானை சுந்தரராமன் வியந்து நின்றார்.
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Comments
Post a Comment